ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் ஸங்கர்ஷ் சமிதி நடத்தவுள்ள வெற்றிப் பேரணியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று தகவல்கள் வெளியானதை தொடர்ந்து மக்கள் பேரணியில் பங்கேற்பதை தடுப்பதற்காக ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத் கோயில் நில விவகாரம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் அரசுக்கும், அமர்நாத் ஸங்கர்ஷ் சமிதிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமர்நாத் ஸங்கர்ஷ் சமிதி ஜம்முவில் இன்று 4 லட்சம் மக்கள் பங்கேற்கும் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதனிடையே இந்த பேரணியின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து பேரணியை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஜம்மு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் மந்தீப் பண்டாரி தெரிவித்துள்ளார்.
பேரணியை ஒத்திவைக்குமாறு ஸங்கர்ஷ் சமிதி கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஆனால் இந்த வேண்டுகோளை ஏற்க அவர்கள் மறுத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஜம்முவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் 3 மணி நேரம் ஊரடங்கு தளர்வு : அமர்நாத் கோயில் நில விவகாரம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் அரசுக்கும், அமர்நாத் ஸங்கர்ஷ் சமிதிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஸ்ரீநகரில் 3 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.