ஒரிசா கலவரம்- தேச அவமானம்: பிரதமர்!
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (20:34 IST)
ஒரிசாவில் நடந்து வரும் மதக் கலவரங்கள் தேச அவமானம் என்று கூறியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், கலவரத்தில் பலியாகியுள்ள ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று கிறித்தவத் தலைவர்கள் குழுவிடம் உறுதியளித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் சங்கப் பேச்சாளர் பாபு ஜோசப், கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பங்கள் ஒவ்வோன்றுக்கும் நிவாரணம், மறுவாழ்வு உதவிகளைத் தனது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாகப் பிரதமர் உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.
இருந்தாலும், ஒரிசாவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளதன் காரணமாக, பிரதமர் அலுவலகத்தில் இருந்து நிவாரண அறிவிப்புகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கிறித்தவத் தலைவர்களுடன் பேசிய பிறகு ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கைத் தொடர்புகொண்ட பிரதமர், கலவரத்தைக் கட்டுப்படுத்தி இயல்பு நிலையைக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேட்டுக்கொண்டார் என்று பிரதமர் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.