சிங்கூர் விவகாரத்தில் தலையிட முடியாது: மத்திய அரசு!
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (16:18 IST)
சிங்கூரில் டாடா நிறுவனத்தின் சிறிய ரகக் கார் தயாரிப்புத் தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மேற்குவங்க அரசிற்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலில் தான் தலையிட முடியாது என்றும், இதில் மாநில அரசுதான் தீர்வுகாண வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் நடத்தி வரும் தொடர்ச்சியான போராட்டங்களினால் சிங்கூரில் நடந்து வரும் டாடா நிறுவனத்தின் சிறிய ரகக் கார்த் தயாரிப்புத் தொழிற்சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டதாக வெளியான தகவல்கள் குறித்து, இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அதன் முடிவுகளை விளக்குவதற்காகச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கபில் சிபலிடம் கேட்டதற்கு, "இதில் மத்திய அரசு தலையிட ஒன்றுமில்லை. மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் சிங்கூர் விவகாரம் பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்குவங்க மாநிலத்தில் அமைதி திரும்பாவிடில், தனது திட்டத்தை திரும்பப் பெற்றுவிடுவேன் என்று ரத்தன் டாடா மிரட்டியதையடுத்து, கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத், சிங்கூர் விவாரத்தைத் தீர்க்க மத்திய அரசு முற்சிக்கும் என்று கூறிய நிலையில், தற்போது மத்திய அரசு தலையிடாது என்று அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.