திருப்பதியில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் நடிகர் சிரஞ்சீவி தனது கட்சியின் பெயரை வெளியிட்டு, முறைப்படி அரசியலில் களமிறங்குகிறார்.
இதற்கென திருப்பதி அவிலாலாவில் மிகப்பெரிய பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அவர் அறிவிக்கவுள்ளார்.
மாநாட்டுக்கான இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டு மேடையில் நடைபெறுவனவற்றை கடைசியில் உள்ளவர்களும் தெளிவாகப் பார்க்கும் வகையில் மாநாட்டு பந்தலில் பிரம்மாண்ட திரைகள் வைக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
பொதுக் கூட்டத்திற்கு வரும் ரசிகர்களின் வசதிக்காக 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இவையனைத்தும் ரேணிகுண்டாவில் நிறுத்தப்படும். இதேபோல் 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகளையும் ஆந்திர அரசு இயக்குகிறது.
சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் அங்குள்ள அரசியல் கட்சிகளிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது அரசியல் பிரவேசம், மாநாடு தொடர்பான செய்திகளை அம்மாநில ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன. இதனால் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.