ஜம்மு-காஷ்மீரில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் மிர்வேஸ் உமர் பாரூக், சையல் அலி ஷா கிலானி ஆகியோரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அமர்நாத் நில போராட்டம் வெடித்துள்ள நிலையில், கிலானியும், உமர் பாரூக்கும் இன்று காலை எதிர்ப்புப் பேரணி நடத்த முடிவு செய்திருந்தனர்.
காஷ்மீரில் அனைத்துக் கட்சிகளின் ஹூரியாத் மாநாடு தலைவரான உமர் பாருக்கையும், பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானியையும் ஸ்ரீநகரில் நேற்றிரவு கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
லால் சவுக் பகுதியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி சுதந்திரம் கோரி பேரணி நடத்த அவர்கள் முடிவு செய்திருந்தனர். இந்த பேரணி நடைபெற்றால், மோதல்கள், உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, இருவரையும் கைது செய்திருப்பதாக காவல்துறையினர் கூறினர்.
இதற்கிடையே நேற்று ஸ்ரீநகரில் சுதந்திரம் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இடையே காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். கலவரக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த இருவார காலமாக நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை 24 முஸ்லிம்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இதுபோன்ற பிரிவினைவாத மோதல்கள் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.