வேலைக்கு நிலம் ஊழல்: லாலுவை பதவி நீக்க தே.ஜ.கூ. கோரிக்கை!
சனி, 23 ஆகஸ்ட் 2008 (18:39 IST)
வேலைக்கு நிலம் ஊழலில் குற்றம் சாற்றப்பட்டுள்ள ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இந்த ஊழலை விசாரிக்க வேண்டும் என்றும் அந்தக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
பா.ஜ.க. துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, ஐக்கிய ஜனதா தளத் (யு) தலைவர் சரத் யாதவ், மக்களவை உறுப்பினர் ராஜிவ் ரஞ்சன் சிங், செய்தி தொடர்பாளர் சிவானந்த் திவாரி ஆகியோர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, வேலைக்கு நிலம் ஊழல் தொடர்பான ஆதாரங்களை அளித்தனர்.
இந்த ஊழலில் மத்திய அமைச்சர்கள் லாலு பிரசாத், பிரேம்சந்த் குப்தா, கான்டி சிங், ரகுநாத் ஜா ஆகியோருக்குத் தொடர்பு உள்ளதை ஆவணங்கள் நிரூபிப்பதாக பிரமரிடம் தெரிவித்த அந்தக் குழுவினர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்வி, "முதலில் வாக்குக்கு பணம் ஊழல், இப்போது வேலைக்கு நிலம் ஊழல். இந்த சம்பவங்கள் நாட்டில் லஞ்சம் அதிகரித்துள்ளதை தெரியப்படுத்துகிறது" என்றும், "இது தவறான முன் உதாரணமாகிவிடும். பிரதமரின் கைகள் கட்டப்பட்டுள்ளன" என்றார்.
இந்திய ரயில்வேயில் வேலைகளைப் பெற்றவர்கள் அதற்காக தங்களது நிலங்களை லாலு பிரசாத்தின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் பெயரில் மாற்றியதற்கான ஆவணங்களை சாட்சியாக வைத்திருப்பதாக தே.ஜ. கூட்டணி தலைவர்கள் கூறினர்.
ஏற்கனவே காலைநடைத் தீவண ஊழல் வழக்கில் அவருக்கு உதவி செய்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் வேலை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வேலைக்கு நிலம் ஊழல் பிரச்சினையை பற்றி விசாரிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளதாக கூறிய சரத் யாதவ், அமைச்சர் லாலு பிரசாத் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.