ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்: பா.ஜ.க.!
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (16:04 IST)
அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதிகளிடம் மத்திய ஐ.ம.கூ. அரசு சரணடைந்து விட்டது என்று குற்றம்சாற்றியுள்ள பா.ஜ.க., ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
நமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பா.ஜ.க. உறுதியாக வலியுறுத்துகிறது என்று கூறியுள்ள பீகார் மாநில பா.ஜ.க. பேச்சாளர் வினோத் நாராயண் ஜா, மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாற்றுக்களை வைத்தார்.
சுதந்திர தினத்தன்று ஜம்மு- காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட சம்பவம், நமது நாட்டின் இறையாண்மை மீதான நேரடித் தாக்குதல் என்று கூறி அவர், அரசியல் தலைவர்கள் தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளின் கொள்கைகளைக் கடந்து இந்த விடயத்தை தீவிரமாகக் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பயங்கரவாதம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுள்ள மென்மையான கொள்கைகளால்தான், பாகிஸ்தான் கொடி ஏற்றப்படும்போது நமது ராணுவம் அமைதியாக இருந்து விட்டது என்றும் அவர் குற்றம்சாற்றினார்.
"தடை செய்யப்பட்டுள்ள இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்திற்கு (சிமி) வெளிப்படையாக ஆதரவளிக்கும் மத்திய அமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய அரசிற்கு அண்மையில் ஆதரவளித்துள்ள சமாஜ்வாடி கட்சிப் பொதுச் செயலர் அமர்சிங் ஆகியோர்தான், அகமதாபாத் குண்டுவெடிப்புகளுக்குக் காரணம்" என்றார் வினோத் நாராயண்.