26-ல் கட்சி தொடக்கம்: சிரஞ்சீவி

திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (14:35 IST)
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வரும் 26-ஆம் தேதி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவிருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆந்திரத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் நடிகர் சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக, கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

இந்த தகவலை சிரஞ்சீவி தரப்பு மறுக்காமல் மவுனம் சாதித்து வந்ததால் அவரது அரசியல் பிரவேசத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த முறையான அறிவிப்பை சிரஞ்சீவி நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக ஐதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள புதிய கட்சி அலுவகலத்தில் சிரஞ்சீவி நேற்று அளித்த பேட்டி:

ஆந்திர அரசியலில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினர் என்னை வற்புறுத்தினர். எனினும் என்.டி. ராமாராவ் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆகியோரின் உத்வேகமே நான் அரசியலுக்கு வரக் காரணம்.

முதலமைசர் ராஜசேகர ரெட்டியோ, சந்திரபாபு நாயுடுவோ எனக்கு எதிரியல்ல. வறுமையும், ஏழ்மையும் தான் எதிரிகள். தனித் தெலுங்கானா, நக்சலைட் பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

திரைப்படங்களில் நடித்து நிறைய சம்பாதித்து விட்டேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசியலுக்கு வருகிறேன். எனவே இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்.

வரும் 26-ஆம் தேதி திருப்பதியில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் நான் தொடங்கும் கட்சியின் பெயரை அறிவிப்பேன்.

இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்தார்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்‌சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ராஜ ஜோகையா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் சிரஞ்சீவி கட்சியில் சேரத் திட்டமிட்டுள்ளார்.

இதேபோல் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் சிரஞ்சீவியின் கட்சியில் சேரக்கூடும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்