ஜார்க்கண்ட் அரசுக்கு ஆதரவை விலக்கியது ஜேஎம்எம்

திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (11:17 IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதுகோடா தலைமையிலான அரசுக்கு அளித்த வந்த ஆதரவை சிபுசோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இதற்கான கடிதத்தை மாநில ஆளுநர் சையது சிப்தே ரஸியிடம் நேற்றிரவு சிபு சோரன் வழங்கினார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, சிபுசோரன் சார்பில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஏற்பதாக காங்கிரஸ் தலைமை அளித்த உறுதியின்பேரில், மத்திய அரசை ஆதரித்து அக்கட்சி எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து ஒருமாதமான நிலையிலும் சிபு சோரனின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், காங்கிரசுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்தத் தலைவர்கள் நெருக்குதல் கொடுக்க தொடங்கினர். ஆனால் காங்கிரஸ் கட்சி இப்பிரச்சினையில் மவுனம் சாதிக்கிறது.

இதற்கிடையே மதுகோடா தமது முதல்வர் பதவியில் இருந்து விலகி தாம் பதவியேற்க வழிவகுக்க வேண்டும் என்று சிபு சோரன் கோரிக்கை விடுத்தார். ஆனால், மதுகோடா பதவி விலகவில்லை.

இந்நிலையில் நேற்று தலைநகர் ராஞ்சியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முக்கியக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் எம்.பிக்கள், 17 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் மதுகோடா அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதனை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பொதுச் செயலர் ஹேமலால் மர்மு தெரிவித்தார்.

இதையடுத்து 17 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநர் ரஸியை சந்தித்தார் சிபு சோரன். அப்போது, ஆட்சிக்கு ஆதரவை விலக்கும் கடிதத்தை அவரிடம் அளித்தார். தவிர ஜே.எம்.எம். சார்பில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த துணை முதல்வர் சுதிர் மஹாதோ மற்றும் 2 அமைச்சர்களும் தங்களது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் அளித்தனர்.

அடுத்த நடவடிக்கையாக ஆட்சியை அமைக்க இதர கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.

இதரக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைப்போம் என நம்பிக்கையுடன் தெரிவித்தார் கட்சியின் மூத்தத் தலைவர் திலீப் சாட்டர்ஜி.

வெப்துனியாவைப் படிக்கவும்