பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (16:52 IST)
"பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம்" என்ற புதிய திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.
பிரதமரின் சுயவேலை வாய்ப்புத் திட்டம், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களும் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதியடைந்ததால், இந்த இரண்டையும் இணைத்து "பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் உத்தேசித்துள்ளது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்தப் புதிய திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.
பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் மானிய அளவும், திட்டச் செலவு உச்சவரம்பும், முந்தைய திட்டங்களைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், உடல் ஊனமுற்றோர் ஆகிய பிரிவினருக்கு மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், உற்பத்தித் துறையில் துவக்கப்படும் தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும். பிற தொழில் மற்றும் சேவைத் துறையைப் பொருத்தவரை ரூ.10 லட்சம் வழங்கப்படும். 8-ஆம் வகுப்பு வரை படித்த பயனாளிகளின் ஆண்டு வருவாய்க்கு உச்சவரம்பு எதுவும் இல்லை.
பஞ்சாயத்துக்கள், சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் உதவியுடன் இந்தத் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களுக்கு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தொழில் முனைவு மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
இந்தத் திட்டம் தேசிய அளவில் கதர், கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அரசின் மானியத் தொகையை பங்கேற்பு வங்கிகளில் செலுத்துகிறது. இந்த வங்கிகள் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, பரிசீலித்து அவர்களுக்கு நிதி அளிக்கும்.