மும்பையில் இரண்டு கட்டடங்கள் இடிந்தன: 20 பேர் பலி!
புதன், 13 ஆகஸ்ட் 2008 (19:29 IST)
மும்பையில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை 70 வயதுக் கட்டடம் ஒன்றும், பள்ளி ஒன்றின் கூரையும் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உள்பட 20 பேர் பலியானதுடன், 61க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை தெற்கு சென்ட்ரலில் பெண்டி பஜார் பகுதியில் கும்பர்வாடா என்ற இடத்தில் உள்ள 70 ஆண்டு பழமையான மூன்று மாடிக் கட்டடம் ஒன்று இன்று காலை 6 மணிக்கு இடிந்து விழுந்தது. இந்தக் கட்டடத்தில் வசித்து வந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் இடிபாடுகளை அகற்றி, 9 குழந்தைகள், 7 பெண்கள் உள்பட 20 பேரின் உடல்களை மீட்டனர். மேலும் 40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குள் வடக்கு மும்பை, பைகுல்லா என்ற இடத்தில் உள்ள பள்ளியின் கூரையும் இடிந்து விழுந்தது. இதில் 24 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்ததாகவும், இவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த இரண்டு கட்டடங்களும் புழங்குவதற்கு தகுதியற்றவை என்றும், அபாயகரமானவை என்றும் மராட்டிய வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டவை என்றும், அதற்கான தாக்கீது அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 மும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.