பா.ஜ.க., வி.எச்.பி. போராட்டம்: டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு!
புதன், 13 ஆகஸ்ட் 2008 (13:44 IST)
அமர்நாத் கோயிலிற்கு நிலம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க., விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்தி வரும் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டங்களால், டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைப் போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியச் சாலைகளிலும், இருப்புப் பாதைகளிலும் இன்று காலை 9 மணிக்குக் குவிந்த பா.ஜ.க.வினர், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்தை தடை செய்து போராட்டம் நடத்தினர்.
இதனால் டெல்லி- ஜெய்ப்பூர் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
விகாஷ் மார்கம், ஐ.டி.ஓ, அக்ஷர்தாம், தீபாளி செளக், வாஷிர்பூர், ஆஷ்ரம், மூல்சந்த், டெல்லி- காஷியாபாத் சாலை, டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை, டெல்லி- நொய்டா- டெல்லி அதிவிரைவுச் சாலை, டெல்லி கன்டோன்மெண்ட், உத்தம் நகர், தெளலா கான் உள்ளிட்ட பல்வேறு முக்கியச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து தடைபட்டது.
பா.ஜ.க., வி.எச்.பி. கொடிகளை ஏந்தியவாறு முழக்கம் எழுப்பி வந்த ஆண்களும், பெண்களும் மேற்கண்ட சாலைகளில் பல்வேறு இடங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இருந்தாலும் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைப் போராட்டக்காரர்கள் தடுக்கவில்லை.