காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு: கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு!
புதன், 13 ஆகஸ்ட் 2008 (13:19 IST)
ஜம்மு- காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு சிறிது நேரம் தளர்த்தப்பட்டது. பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டவுடன் சுட்டுத்தள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரம், வன்முறைச் சம்பவங்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் கலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை நிலைமை சற்று சீரடைந்ததால், ஜம்மு நகரம், சம்பா, உதம்பூர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு சிறிது தளர்த்தப்பட்டது. காலை 8மணி முதல் 11 மணி வரை பொதுமக்கள் தங்களின் வீட்டில் இருந்து வெளியேறி தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நேரத்தில் எத்தகைய அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். இன்று மாலையும் சிறிது நேரம் ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தத் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வன்முறைகள் தொடரும் அபாயம் உள்ள கிஸ்த்வார் உள்ளிட்ட சில பகுதிகளில், பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் கலவரத்தில் ஈடுபடும் நபர்களைக் கண்டவுடன் சுட்டுத்தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கிஸ்த்வார் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய ரிசர்வ் காவல் படையினருடன், ராணுவத்தினரும் இணைந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினர் இன்று காலை முதல் தொடர்ந்து அறிவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.