ஸ்ரீநகரில் கலவரம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:08 IST)
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவை மீறி ஊர்வலமாகச் சென்ற ஆயிரக்கணக்கானோரை இராணுவத்தினரும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், பலர் காயமுற்றனர்.

ஸ்ரீநகரின் ரைனாவாரி என்ற இடத்தில் இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. போராட்டக்காரர்களை கலைக்க முதலில் காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர், பிறகு கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதனையடுத்து போராட்டக்கார்ர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும், அதன்பிறகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவரின் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்ததை யு.என்.ஐ. செய்தியாளர் பார்த்துள்ளார் என்று அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜம்முவில் தொடர்ந்து கலவரம் நடந்துவரும் நிலையில், அதன் எதிர்வினையாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

தங்களுக்கு எதிரான பொருளாதாரத் தடையை எதிர்த்து கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியின் தலைநகரான முசாஃபராபாத்திற்கு பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்கார்ர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹூரியாத் தலைவர் அஜீஸ் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்