ஜம்மு: துப்பாக்கிச் சூட்டில் ஹூரியத் தலைவர் உள்பட 3 பேர் பலி!
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (18:58 IST)
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீருக்குள் நுழைய முயன்றவர்களின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் அப்துல் அஜீஸ் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 80 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள முஷாஃபராபாத் நகரில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக காஷ்மீர் பழ உற்பத்தியாளர் சங்கத்தினரும், ஹூரியத் மாநாட்டுக் கட்சியினரும் அறிவித்திருந்தனர்.
அதன்படி ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஷபிர் அகமது ஷா தலைமையிலான லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஸெரி என்ற இடத்தில் குவிந்து உரியை நோக்கிச் சென்று, பின்னர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை அடைந்தனர்.
இந்தப் போராட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த மத்திய ரிசர்வ் காவல்படையினரும், துணை ராணுவத்தினரும் இணைந்து போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர்.
பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையை மீறி காமன் என்ற இடத்தில் உள்ள இந்திய ராணுவத்தின் கடைசிக் கண்காணிப்பு மையத்தைக் கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீருக்குள் நுழையப் போராட்டக்காரர்கள் முயன்றனர்.
விடுதலை முழக்கங்களையும், இந்துமத அடிப்படைவாதிகளுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பியபடி தடையை மீறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களின் மீது பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினர்.
இதையடுத்து இருதரப்பிற்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் அப்துல் அஜீஸ் உள்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர்.