அனைத்துக் கட்சிக் குழுவுடன் பேச அமர்நாத் போராட்டக் குழு சம்மதம்!

சனி, 9 ஆகஸ்ட் 2008 (18:05 IST)
தங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் தலைவர்கள் அற்ற மற்றப் பிரதிநிதிகளுடன் பேசலாம் என்று அனைத்துக் கட்சிக்குழு ஒப்புதல் அளித்ததையடுத்து பேச்சுவார்த்தைக்கு வர ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி சம்மதம் தெரிவித்துள்ளது.

புனித அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை அளித்தே தீரவேண்டும் என்று போராடிவரும் ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி, அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள காஷ்மீர் கட்சிகளின் தலைவர்களான பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி, சைஃபுதீன் சோஸ் ஆகியோர்தான் அமர்நாத் கோயிலிற்கு நிலம் அளிக்கப்பட்டதை எதிர்த்து பிரச்சனையாக்கினார்கள் என்றும், அவர்கள் இடம்பெற்றிருக்கும் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் கூறியிருந்தனர்.


அவர்களின் கோரிக்கையை அனைத்துக் கட்சிக் குழு ஏற்றது. இதனையடுத்து ஜம்மு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அதன் பேச்சாளர் அம்பேத்கார் குப்தா கூறியுள்ளார்.

இக்குழுவுடன் வந்திருந்த அம்மாநில ஆளுநர் என். என். வோராவும் பேச்சுவார்த்தையில் இடம்பெறக் கூடாது என்று அ.ச.ச. கூறியதால், அவர் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றார்.

இப்பிரச்சனை தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தாங்கள் அனைத்துக் கட்சிக் குழுவிடம் தெரிவிக்கப்போவதாகவும் குப்தா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்