ஜம்முவில் அனைத்துக் கட்சிக் குழு! அமர்நாத் போராட்டக் குழு புறக்கணிப்பு எச்சரிக்கை!
சனி, 9 ஆகஸ்ட் 2008 (14:25 IST)
புனித அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு 40 ஹெக்டேர் நில மாற்றம் செய்த்தை ஜம்மு-காஷ்மீர் அரசு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி, அனைத்துக் கட்சிக் குழுவை புறக்கணிக்கப்போவதாக எச்சரித்துள்ளது.
அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நில மாற்றம் செய்து பிறகு அதை ரத்து செய்த விவகாரம் விசுவரூபமெடுத்து பெரும் போராட்டமாக வெடித்துள்ள நிலையில், நிலைமையை நேரில் கண்டு, பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மத்திய உள் துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் தலைமையிலான குழு இன்று காலை ஜம்மு வந்தது.
இக்குழுவில் தேசிய மாநாட்டுக் கட்சியின் காப்பாளர் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக்க் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சைஃபுதின் சோஸ் ஆகியோர் இடம்பெற்றிருப்பதால் அக்குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி தலைவர் லீலா கரண் ஷர்மா கூறியுள்ளார்.
அமர்நாத் கோயிலிற்கு நிலம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனையை உருவாக்கியதே இக்கட்சிகள்தான் என்று குற்றம்சாற்றிய லீலா கரண் ஷர்மா, அவர்களைத் தவிர்த்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே செல்வோம் என்று கூறியுள்ளார்.