கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்மட்டக் குழு!
சனி, 9 ஆகஸ்ட் 2008 (13:38 IST)
கடற்படை, துறைமுகங்கள், மீன்பிடிப்புத் தளங்கள், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட கடல்சார் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் எல்லா அமைச்சகங்களையும் ஒருங்கிணைத்துக் கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான உயர்மட்டக் குழு ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது.
கடல்சார் அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிப்பதன் மூலம், தகவல் பரிமாற்றத்தை விரைவுபடுத்தி எல்லா விடயங்களிலும் கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு வருவதாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்தார்.
"கடல் தொடர்புடைய வெவ்வேறு அமைச்சகங்கள் பல்வேறு துறைகளை நிர்வகித்து வரும் சூழலில், கடல்சார் விடயங்களை நிர்வகிப்பதற்கான உயர்மட்டக் குழுவை அமைப்பது முக்கியமான நடவடிக்கையாகும். இதனால், அமைச்சகங்கள் தங்களது கொள்கைகளையும் முடிவுகளையும் பராமரிப்பது எளிதாகும். அவசர காலத்தில் உடனடியாக முடிவெடுக்கவும், தகவல் பரிமாற்றத்தை விரைவுபடுத்தவும் இத்தகைய குழு அவசியம்." என்றார் அவர்.
தற்சமயம் உள்ள நமது நிர்வாகக் கோளாறுகளை விவரித்த சுரேஷ் மேத்தா, "கடல்சார்ந்த மீன்வளத்துறை வேளாண் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்னும் சில துறைகள் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. எனவே கடல்சார் பாதுகாப்பு முடிவுகளை மேற்கொள்ள இந்த இரண்டு அமைச்சகங்களும் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" என்றார்.
மேலும், உயர்மட்டக் குழு அமைக்கும் முடிவானது அரசின் பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.