ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு: ராணுவம் கொடி அணிவகுப்பு!
சனி, 9 ஆகஸ்ட் 2008 (12:37 IST)
அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் தொடர்ந்து வரும் போராட்டங்களால் இன்றும் ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் நிலைமைகளை ஆராய்வதற்காக புது டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு இன்று வருவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்துவா, ராஜூரி, ஜம்மு, சம்பா மாவட்டங்களில் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஜம்மு, சம்பா, கத்துவா, பூஞ்ச் மாவட்டங்களில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். "ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இதுவரை விரும்பத்தகாத சம்பவம் எதுவும் நடக்கவில்லை. நிலைமை கட்டுக்குள் அமைதியாக உள்ளது" என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கத்துவாவில் ஊரடங்கு உத்தரவு 72 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜம்முவிலும் சம்பாவிலும் இன்று 9 ஆவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.