அணு மின் நிலையங்களில் தனியாருக்கு அனுமதி: ஜின்டால் கோரிக்கை!
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (18:43 IST)
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, நமது நாட்டில் அணு மின் நிலையங்களை அமைக்கும் பணிகளில் தனியாருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உருக்கு உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள ஜின்டால் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
"அணு மின் நிலையங்களை அமைக்க தனியாருக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட வேண்டும். அதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் உருவாக்கப்பட வேண்டும்" என்று ஜின்டால் உருக்கு, மின் உற்பத்தி நிறுவனங்களின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான நவீன் ஜின்டால் கூறினார்.
அணு மின் நிலையங்களை நிறுவும் பணிகளை மேற்கொள்ள ஜின்டால் குழுமம் ஆர்வமாக இருப்பதாகவும், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, அணு மின் நிலையங்களில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டால், அதைப் பெற தனது நிறுவனம் முயற்சிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
2020- ஆம் ஆண்டிற்கான இலக்கை வெளியிட்ட நவீன், 2020- இல் 3 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய தனது நிறுவனம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார். இதேபோல 2020- இல், உருக்கு உற்பத்தியை ஆண்டிற்கு 30 மில்லியன் டன்களாக அதிகரிக்கவும், மின் உற்பத்தியை 5,000 மெகாவாட்டில் இருந்து 15,000 மெகாவாட்களாக அதிகரிக்கவும் ஜின்டால் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.