கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம்: அமைச்சரவை பரிந்துரை!
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (17:19 IST)
கல்வி பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்கும் சட்ட வரைவை அமைச்சர்கள் குழுவின் ஆய்விற்கு மத்திய அமைச்சரவை அனுப்பியுள்ளது.
இந்த அமைச்சரவைக் குழுவில், நிதியமைச்சர் ப.சிதம்பரம், அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபல், மத்தியத் திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் உள்ளனர்.
கல்வி பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்கும் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், அதை விரைவில் ஆய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர்கள் குழுவைப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
இத்தகவலைத் தெரிவித்த மத்திய அமைச்சர் கபில் சிபல், "முந்தைய பா.ஜ.க. தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்துத் தோல்வியடைந்து விட்டது" என்று குறிப்பிட்டார்.
மத்திய அரசின் பதவிக்காலம் முடிவதற்குள், இந்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவோம் என்றார் அவர்.
இந்தச் சட்டத்தின் மூலம், 6 முதல் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக இலவசக் கல்வி வழங்குவது உறுதி செய்யப்படுவதுடன், கல்வி உரிமையானது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக்கப்படும்.