யுரேனியம் கண்டறிதல் பணிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு!
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (15:20 IST)
2020-இல் அணு சக்தி மூலம் 20,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்ற இலக்கை எட்டும் வகையில், யுரேனியம் வளம் அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறியும் பணிக்காக ரூ.200 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், யுரேனியம் வளம் அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறியும் பணிகளுக்காக 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.120 கோடியும், 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.80 கோடியும் ஒதுக்குவது என்று விவாதித்து முடிவு செய்யப்பட்டது.
"நமது நாட்டின் அணு மின் திட்டங்களுக்குத் தேவையான 75,000 டன் யுரேனியத்தைக் கூடுதலாகப் பெறுவதற்கு இந்த நிதி உதவும்" என்று மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் கபில்சிபல் தெரிவித்தார்.
நமது நாட்டின் மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, 2020-இல் அணு சக்தி மூலம் 20,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்ற இலக்கை எட்ட, புதிய யுரேனியம் வளங்களைக் கண்டறிவது அவசியம் என்றார் அவர்.
மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் வானியல் ரீதியான, புவியியல் ரீதியான ஆய்வுப் பணிகள் மேம்பாட்டிற்கான, ரூ.259.69 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் 11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.249.05 கோடியும், 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.9.64 கோடியும் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.