பயங்கரவாதம்: தலைமைச் செயலர்கள், டி.ஜி.பி.க்கள் கூட்டம் துவங்கியது!
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (14:31 IST)
மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள், காவல்துறை இயக்குநர்களுக்கான கூட்டம் தலைநகர் டெல்லியில் துவங்கியது. இந்தக் கூட்டத்தில் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.
பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் அண்மையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஒரு நாள் கூட்டத்திற்கு உள்துறைச் செயலர் மதுக்கர் குப்தா தலைமை தாங்குகிறார்.
"நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில், மக்களின் மத்தியில் பீதியை உண்டாக்கும் நோக்கத்துடனும், அவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் சேதம் விளைவிக்கும் நோக்கத்துடனும் சில திட்டமிட்ட பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்துள்ளன.
உள்ளூர் சக்திகளுடன் இணைந்து இவற்றை நடத்தியுள்ள பயங்கரவாதிகளின் முதன்மையான நோக்கம், வெடிபொருட்களின் மூலம் அதிபட்ச சேதத்தை விளைவிப்பதே ஆகும்.
இத்தகைய பயங்கரவாத சக்திகளின் தொடர்புகளைக் கண்டறிந்து, அவற்றை அடியோடு களையெடுப்பது குறித்து, இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்" என்று உள்துறை பேச்சாளர் தெரிவித்தார்.