சிமி மீதான தடையை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு: அரசு!
புதன், 6 ஆகஸ்ட் 2008 (15:46 IST)
தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) மீதான தடையை நீக்குவதாக சிறப்பு நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
சிமி இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறுகையில், "தேவைப்பட்டால் சிறப்பு நடுவர் மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்யும்" என்றார்.
சிறப்பு நடுவர் மன்றத்தின் உத்தரவை மத்திய அமைச்சரவை ஆய்வு செய்து வருவதாகவும், இது தொடர்பாகச் சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து, அவர்கள் அறிவுரையின்பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
சிமி இயக்கத்தின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கிச் சிறப்பு நடுவர்மன்றம் உத்தரவிட்டுள்ளதன் மூலம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எந்தவிதமான பின்னடைவும் ஏற்பட்டுள்ளதாகத் தான் கருதவில்லை என்று தெரிவித்த அவர், அகமதாபாத், பெங்களூரு தொடர் குண்டு வெடிப்புகள் பற்றி விசாரணைகளும் பாதிக்கப்படாது என்று கூறினார்.