இஸ்லாமியருக்கு 4% கல்வி இட ஒதுக்கீட்டிற்கு உச்ச நீதி நிபந்தனை அனுமதி!
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (16:28 IST)
ஆந்திர மாநில தொழில் நுட்பக் கல்வி நிலையங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் ஆந்திர அரசின் உத்தரவை நிபந்தனையுடன் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆந்திர மாநில தொழில் நுட்பக் கல்விக்கான கலந்தாய்வு முடிந்துவிட்டதால் மாணாக்கர்களை சேர்க்கவேண்டிய நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கோரி ஆந்திர அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி. சதாசிவம், ஜே.எம். பஞ்ஞால் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு இன்று விசாரித்தது.
ஆந்திர அரசின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர், இஸ்லாமியர்களுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து ஆந்திர அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்திற்கு முரணானது அல்லவென்றும், கலந்தாய்வு முடிந்தவிட்ட நிலையில் மாணாக்கர் சேர்க்கை நடைபெற அனுமதிக்காவிட்டால், அது ஒட்டுமொத்த மாணாக்கர் சேர்க்கையையே தடம்புரளச் செய்துவிடும் என்று கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இஸ்லாமியர்களுக்கு தொழிற்கல்வியில் அளிக்கப்படும் இட ஒதுக்கீடு தொடர்பாக தற்பொழுது ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணை முடிவிற்கு உட்பட்டு மாணாக்கர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டனர்.
ஆந்திர அரசின் இட ஒதுக்கீடு ஆணை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய அரசமைப்பில் இடமில்லை என்றும் கூறி தொடரப்பட்ட வழக்குகளை ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் 7 நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற அமரவை நியமித்து விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.