தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% அரசு ஒதுக்கீடு: பா.ம.க. போராட்டம்!
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (15:55 IST)
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களை அரசிற்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரி சட்டப் பேரவை வளாகம் அருகில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ம.க. நாடாளுமன்றத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், பா.ம.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனந்தராமன், அருள் முருகன், பன்னீர் செல்வம் ஆகியோர் உட்படப் பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெறுவதற்கு புதுச்சேரி அரசு சட்டமியற்ற வேண்டும் என்று பேராசிரியர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
புதுவை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மருத்துவர் கல்லூரிகளின் முன்பு பா.ம.க. சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
முன்னதாக, பேராசிரியர் ராமதாஸ் தலைமையில் கதீட்ரல் சர்ச் அருகில் கூடிய பா.ம.க.வினர், சட்டப் பேரவை அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் நடத்த ஊர்வலமாகப் புறப்பட்டனர். ஆனால் அவர்களை ஆம்பூர் சாலை ரோடு பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.