ஜம்மு கலவரம்: பிரதமர் தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்!
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (11:08 IST)
அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ததை கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து கலவரம் நிலவுவதால், இதுகுறித்து விவாதிக்க நாளை பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தேசிய கட்சிகளுக்கு மட்டுமின்றி ஜம்முவில் செயல்படும் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வனத்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை அமர்நாத் கோயிலுக்கு வழங்கிய உத்தரவை அம்மாநில அரசு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த 2 வாரங்களாக ஜம்மு-காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடைபெறும் இடங்களில் ஊரடங்கு பிறப்பிப்பதும், பின்னர் அதனை சில மணி நேரத்திற்கு விலக்குவதும் தற்போது அங்கு வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், நேற்று சம்பா என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் மேலும் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் உயர்மட்டக் குழு இப்பிரச்சனை குறித்து நேற்று விவாதித்தது. இதில் புதனன்று (நாளை) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் தலைமையில் கூட்டி விவாதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், ஜம்முவின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை சேகரித்து மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க 2 உயரதிகாரிகள் ஜம்முவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.