மன்மோகன் சிங்கே பிரதமர் வேட்பாளர்: காங்

ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2008 (15:40 IST)
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த பிரச்சினையால் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அரசு தப்பிவிட்ட நிலையில், அடுத்த மக்களவைத் தேர்தலிலும் மன்மோகன் சிங்கே காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் பதவி என்பது காலியாக இல்லை என்றும், பிரதமர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படவில்லை. அதற்கான தேவையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக எல்.கே. அத்வானியை பாஜக அறிவித்து விட்ட நிலையில், 3-வது அணி சார்பில் மாயாவதியை பிரதமருக்கான வேட்பாள்ராக முன்னிலைப்படுத்த முயற்சிகள் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அபிஷேக் சிங்வி மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மன்மோகன் சிங்தான் அடுத்த மக்களவைத் தேர்தலிலும் பிரதமராக முன்னிறுத்தப்படுவார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் முக்கிய மனிதராகத் திகழ்கிறார் என்று அவர் கூறினார்.

அர்ஜூன் சிங் போன்ற மூத்த தலைவர்கள் சிலர் அடுத்த தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்