சுர்ஜித் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2008 (14:40 IST)
டெல்லியில் மரணம் அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் உட்பட தலைவர்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

மதச்சார்பற்ற நிலைக்கும், கூட்டணி அரசியலுக்கும் வித்திட்டவர் சுர்ஜித் என்று அவர்கள் புகழாரம் சூட்டினர்.

சுர்ஜித்தின் உடல் டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழகத்தில் இருந்து டெல்லி தீன்மூர்த்தி லேனில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை எடுத்து வரப்பட்டது.

அங்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என ஏராளமானோர் சுர்ஜித்தின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் ஆகியோர் இன்று சுர்ஜித்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

சுர்ஜித் மரணம் அடைந்தாலும், அவரது கொள்கைகள் எப்போதும் தொடர்ந்து நிலைக்கும் என்றும், மிகச்சிறந்த ஒரு அரசியல்வாதியாக அவர் திகழ்ந்தார் என்றும், நாட்டிற்காக ஏராளமான நன்மைகளைச் செய்தவர் என்றும் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாட்டீல் குறிப்பிட்டார்.

ஏழைகளுக்கு உண்மையான தலைவராகத் திகழ்ந்தவர் என்றும், தொழிலாளர் வர்க்கத்தினருக்கு உரிய பங்கினை ஆற்றியவர் என்றும் கூறிய லாலு பிரசாத், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாவதற்கு முக்கியப் பங்காற்றியவர் என்றார்.

இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

நொய்டா அருகேயுள்ள மெட்ரோ மருத்துவமனையில் சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்