ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் வாழ்க்கை குறிப்பு!
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (17:45 IST)
ஜலந்தரில் உள்ள பந்தலா கிராமத்தில் 1916 மார்ச் 23 ஆம் தேதி பிறந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், மாவீரன் பகத்சிங்கின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக தனது இளமைப் பருவத்தில் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தனது இளமைக் காலத்தில் பல்வேறு சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் பங்கேடுத்துள்ள சுர்ஜீத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் 1936 இல் இணைந்தார். பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய பி.சுந்தரய்யா, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் உள்ளிட்ட தலைவர்களுடன் நின்றார் சுர்ஜீத்.
1992 முதல் 2005 வரையிலான 13 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றிய சுர்ஜீத், அப்பதவிக்குப் பிரகாஷ் காரத் தேர்வு செய்யப்பட்ட பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வு பெற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் முதல்முறையாக, கடந்த மாதம் கோவையில் நடந்த அக்கட்சியின் 19 ஆவது அகில இந்திய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய அரசியல் தலைமைக் குழுவில் சுர்ஜீத்தின் பெயர் அவரது உடல்நிலை காரணமாக இடம்பெறவில்லை. இருந்தாலும், கட்சியின் மத்தியக் குழுவின் சிறப்பு அழைப்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
தேசிய அரசியலில் "கிங் மேக்கர்" என அறியப்பட்ட சுர்ஜீத், கடந்த 1996 முதல் 1998 வரை நீடித்த ஐக்கிய முன்னணி அரசை உருவாக்கியதிலும், 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஐ.மு.கூட்டணியை உருவாக்கியதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
1978 முதல் 1984 வரை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்த சுர்ஜீத், இரண்டு முறை பஞ்சாப் சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் (1953- 57 மற்றும் 1967- 69).
சுர்ஜீத்தின் மனைவி பிரீத்தம் கெளர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்டப் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட புத்தககங்களையும் அவர் எழுதியுள்ளார்.