மார்க்சிஸ்ட் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் காலமானார்!
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (16:13 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் இன்று காலமானார். அவருக்கு வயது 92.
சுவாசக் கோளாறு காரணமாக நொய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுர்ஜித், இன்று மதியம் 1.32 மணியளவில் காலமானார். உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர் புருஷோத்தம் லால் தெரிவித்துள்ளனர்.
சுர்ஜித் காலமான தகவல் அறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதச் செயலர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீதாராம் யச்சூரி, பிருந்தா காரத், எஸ்.ஆர்.பிள்ளை, மத்தியக் குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு உள்ளிட்ட தலைவர்கள் மருத்தவமனையில் குவிந்தனர்.
சுர்ஜித்தின் உடல் கட்சியின் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி. பவனிற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த சுர்ஜித் கடந்த ஆறு மாதங்களில் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மே மாதம் நினைவிழந்து கோமா நிலைக்குச் சென்ற சுர்ஜித்திற்கு, மருத்துவர்களின் தீவிர சிகிச்சையினால் அதிர்ஷ்டவசமாக நினைவு திரும்பியது.
நமது நாட்டில் மதசார்பற்ற சக்திகளை இணைத்துக் கூட்டணி அரசுகளைக் கட்டமைத்து மதவாத சக்திகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் என்ற வகையில், சுர்ஜித்தின் மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவு என்பதில் பிழையில்லை.
சுர்ஜித்தும், மற்றொரு மூத்த தலைவரான ஜோதிபாசுவும்தான் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைக் கட்டமைத்த சிற்பிகள் ஆவர். இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுர்ஜித் உடல்நலக் குறைவின் காரணமாக பொது இயக்கங்களில் பங்கேற்க முடியவில்லை.
இந்தியாவில் இடதுசாரி இயக்கங்களை வழிநடத்தியவர்களில் ஒருவர் என்ற பெருமைக்குரிய சுர்ஜித், 1992 முதல் 2005 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றினார்.