மாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய்: பரிசீலிக்க ஆறு பேர் குழு!
புதன், 30 ஜூலை 2008 (14:13 IST)
ராமர் சேது என்றழைக்கப்படும் மணல் திட்டுக்களைச் சேதப்படுத்தாமல் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றும் சாத்தியம் உள்ளதா என்பதை பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்ள ஆறு பேர் கொண்ட நிபுணர் குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளது.
சேதுக் கால்வாய் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றிப் பரிசீலிக்க ஆறு பேர் கொண்ட குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார் என்று மத்திய அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர் தெரிவித்துள்ள கடிதத்தை, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜெ.எம்.பாஞ்சால் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வின் முன்பு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஃப். எஸ். நாரிமேன் சமர்ப்பித்தார்.
டாடா எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் முனைவர் ஆர்.கே.பச்செளரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் எஸ்.ஆர். ஷேலியே, முனைவர் எஸ்.கதிரொளி, ரியர் அட்மிரல் பி.ஆர்.ராவ், இந்திய புவியியல் ஆய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் பி.எம்.தாஜ்லே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு தனது அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.