குண்டுவெடிப்பு: தகவல் அளித்தால் ரூ.51 லட்சம் - மோடி

புதன், 30 ஜூலை 2008 (12:10 IST)
குஜராத் மாநிலம் சூரத்தில் வெடிக்காமல் கிடந்த குண்டுகள் கைப்பற்றப்பட்ட இடத்தை முதல்வர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.

அகமதாபாத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பிலும், சூரத்தில் குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்திலும் தொடர்புடைய தீவிரவாதிகள் பற்றிய தகவல் அளிப்போருக்கு 51 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்தார்.

சூரத்தின் வராச்சா பகுதியில் நேற்று 18 குண்டுகள் வெடிக்காமல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

அந்தப் பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்த மோடி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கப்படும் என்றார்.

மோடியுடன் அமைச்சர் நரோத்தம் படேல், குஜராத் காவல்துறை தலைவர் பி.சி. பாண்டே ஆகியோரும் சென்றனர்.

பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சூரத் நகரில் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், பொது இடங்கள் இன்றும், காவல்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் 2-வது நாளாக மூடப்பட்டிருந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்