சூரத்தில் இன்று 15 குண்டுகள் கண்டுபிடிப்பு!
செவ்வாய், 29 ஜூலை 2008 (18:58 IST)
குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் இன்று மேலும் 15 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டன. சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து குண்டுகள் சிக்கியதால் நகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
இந்த குண்டுகள் பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளிலும், வைரத் தொழிற்சாலைகள் நிரம்பிய இடங்களிலுமே வைக்கப்பட்டிருந்து உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரச்சா என்ற பகுதியில் உள்ள மினி டைமண்ட் மார்க்கெட் பகுதியில் இன்று காலை 6 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள நடைபாதை மேம்பாலத்திற்கு அருகில் மர்மப் பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சோதனை நடத்திய காவல்துறையினர் 3 குண்டுகளைக் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர்.
"நாங்கள் நிறைய குண்டுகளைக் கைப்பற்றியுள்ளோம். அவற்றின் எண்ணிக்கையைத் தற்போது கூற முடியாது" என்று சூரத் மாநகரக் காவல்துறை ஆணையர் ஆர்.எம்.எஸ். ப்ரார் தெரிவித்தார்.
செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள எல்லா குண்டுகளும் தடவியல் ஆய்விற்கு அனுப்பப்பட்டு உள்ளன. ஆய்வின் முடிவு கிடைத்த பிறகுதான் மேலும் விவரங்களை தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
குண்டுகளில் சில மரத்தில் தொங்கவிடப்பட்டு இருந்ததாகவும், சில பூந்தொட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்ததாகவும், சில பழைய பைகளில் வைக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டு இருந்ததாகவும் ப்ரார் தெரிவித்தார்.