அப்துல் ஹலிமைப் பார்க்க வருவோரிடம் விசாரணை!
திங்கள், 28 ஜூலை 2008 (19:35 IST)
பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுவதால், கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் ஹலிம் உள்ளிட்ட சிமி இயக்கத் தலைவர்களைச் சந்திக்க வருபவர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
"கடந்த 27 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அப்துல் ஹலிம் உள்ளிட்ட சிமி இயக்கத்தினரைச் சிறையில் சந்தித்துப் பேச வரும் அனைவரிடமும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை சிமி இயக்கத்தினரைப் பார்த்துப் பேசியவர்களான 400 பேரின் பட்டியலை சிறை அதிகாரிகள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிமி இயக்கத்தவரைச் சந்திக்க வரும் அனைவரிடமும், சுய விவரங்கள், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் சேகரித்துப் பதிவு செய்யப்படுகின்றன.
தற்சமயம் 5 சிமி இயக்கத்தவர் மட்டுமே இந்தூர் சிறையில் உள்ளனர். மற்றவர்களை பல்வேறு வழக்குளில் விசாரணை நடத்துவதற்காக மராட்டியம் மற்றும் கர்நாடகக் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக, காவல்துறை விசாரணையில் இருந்து வந்த அப்துல் ஹலிம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் 14 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.