கட்சிமாறி வாக்களிப்பு: 23 எம்.பி.க்களின் மீது நடவடிக்கை!
வெள்ளி, 25 ஜூலை 2008 (16:48 IST)
மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சியின் முடிவை மீறி அரசிற்கு எதிராக வாக்களித்த தனது எம்.பி.க்கள் 6 பேரை சமாஜ்வாடிக் கட்சி நீக்கியுள்ளது. இத்துடன் பல்வேறு அரசியல் கட்சிகளை விட்டு நீக்கப்பட்டுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
"கட்சியின் உத்தரவை மீறிச் செயல்பட்ட 6 எம்.பி.க்களை நாங்கள் கட்சியை விட்டு நீக்கியுள்ளோம். இந்த முடிவை நாளை நாங்கள் மக்களவைத் தலைவரிடம் தெரிவிக்கவுள்ளோம்" என்று சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங் தெரிவித்தார்.
அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி எம்.பி.க்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாற்று ஆதாரமற்றது என்றும் அமர்சிங் மறுத்தார்.
முன்னாவர் ஹூசைன் (முசாஃபர் நகர்), அடிக் அகமது (புல்பூர்), அஃப்சல் அன்சாரி (காசிப்பூர்), ராஜ் நாராயணன் புதோலியா (ஹமிர்பூர்), எஸ்.பி.சிங் பாகெல் (ஜலேசர்), ஜெய் பிரகாஷ் (மோகன்லால் கஞ்ச்) ஆகியோர்தான் சமாஜ்வாடிக் கட்சியின் நடவடிக்கைக்கு உட்பட்ட எம்.பி.க்கள் ஆவர்.
23 எம்.பி.க்களின் மீது நடவடிக்கை!
மேற்கண்ட சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் 6 பேருடன் சேர்த்து, இதுவரை தலைமையின் உத்தரவை மீறியதற்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளை விட்டு நீக்கப்பட்டுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
ம.தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இருந்து தலா 2 எம்.பி.க்கள் நேற்று நீக்கப்பட்டுள்ளனர்.
சிரோன்மணி அகாலி தளம் கட்சியில் இருந்து சுக்தேவ் சிங் லிப்ரா என்ற எம்.பி. அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததற்காக நீக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, பா.ஜ.க. வில் இருந்து 8 எம்.பி.க்களும், மதசார்பற்ற ஜனதா தளம், சிவசேனா, தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒரு எம்.பி.க்களும் நீக்கப்பட்டுள்ளனர்.