மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று தனது 80வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இதையொட்டி பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மன்மோகன்சிங் தனது அலுவலக அதிகாரி மூலம் சோம்நாத் சாட்டர்ஜிக்கு மலர்க் கொத்து ஒன்றை கொடுத்து அனுப்பியதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, நபார்டு வங்கி அதிகாரி ஒருவரும் தங்களது வாழ்த்துக்களை சாட்டர்ஜிக்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த 1929ஆம் ஆண்டு அஸாமின் தெஸ்பூர் பகுதியில் பிறந்த சாட்டர்ஜி, கொல்கத்தா சட்டப்படிப்பு பயின்றார். பின்னர் அதே பிரிவில் இங்கிலாந்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.
1968ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த சாட்டர்ஜி, மூன்றாண்டுக்கு பின்னர் தனது சொந்தத் தொகுதியான போல்பூரில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
ஜோதிபாசுவின் தலைமையின் கீழ் அரசியல் வாழ்க்கையை துவங்கிய சாட்டர்ஜி, கடந்த 2 நாட்களுக்கு முன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.