நம்பிக்கை வாக்கெடுப்பு: டி.வி ரேட்டிங் உயர்வு

புதன், 23 ஜூலை 2008 (15:34 IST)
அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில், எங்கே அரசு கவிழ்ந்து விடுமோ என நாடு முழுவதும் பரபரப்பாக பேசிக்கொண்ட நிலையில், கடந்த 21 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெற்ற மக்களவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம், வாக்கெடுப்பின் போது லோக்சபா டி.வி-யை பார்த்தோர் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

தொலைக்காட்சி நேயர்கள் விகிதம் குறித்த கணக்கெடுப்பின்படி (ரேட்டிங்), இந்த இரு தினங்களிலும் சென்செக்ஸ், விளையாட்டு சேனல்களையும் தாண்டி செய்திகளை ஒளிபரப்பு செய்யும் அலைவரிசைகளின் ரேட்டிங்கும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்ததாகத் தெரிய வந்துள்ளது.

மக்களவை கூட்டத்தொடரை லோக்சபா டி.வி. நேரடியாக ஒளிபரப்பு செய்ததால், கடந்த 21ம் தேதி மட்டும் சுமார் 46 விழுக்காடு ரேட்டிங் உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி சேனல்களின்போது, மக்களவை உறுப்பினர்களின் பேச்சுகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கும் கடும் போட்டி இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தூர்தர்ஷன் செய்தி அலைவரிசையின் பார்வையாளர் விகிதம் 20.4 விழுக்காடு உயர்ந்ததாகவும், என்டிடிவி இந்தியா சுமார் 18 விழுக்காடு அளவுக்கு அதிக பார்வையாளர்களைக் கவர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக செய்தி சேனல்களின் ரேட்டிங் விகிதம் சுமார் 20 முதல் 30 விழுக்காடு வரை இந்த நாட்களில் உயர்ந்துள்ளது.

இதற்கு முன்னர் இதுபோன்ற பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு என்றால் குஜராத் தேர்தல் தான் என்று தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்