திமுக கூட்டணியில் காங்கிரஸ் கடந்த 8 வருடங்களாக பயணித்து வருகிறது.. ஆனால் திடீரென ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை காங்கிரஸ் முன் வைத்தது.. அதோடு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டது.. இந்த இரண்டையுமே திமுக ஏற்கவில்லை.. ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத ஒன்று.. அதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என ஸ்டாலின் கூறினார்.. அதேபோல் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என முதலில் கூறியது திமுக. ஆனால், அதை காங்கிரஸ் ஏற்கவில்லை.
எனவே தொகுதி பங்கிட்டு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.. அதன்பின் ப.சிதம்பரம் வந்து பேசி 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என முடிவானது
.. திமுகவும் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்துவந்தபோது திமுக கூட்டணியில் விரிசல் விழப்போகிறது.. எங்களை அடிமை என சொல்லிவிட்டு திமுக காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கிறது என பழனிச்சாமி பேசினார். சமீபத்தில் வந்த பிரதமர் மோடியும் திமுக கூட்டணியில் பிளவு என்று பேசினார். ஆனால் பேச்சு வார்த்தையை கச்சிதமாக பேசி முடித்து விட்டது திமுக.
இந்நிலையில், திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள். நம்மிடமிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் இரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம்.
மதவெறி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்கிற கொள்கை உணர்வுமிக்க நம் தோழமைக் கட்சியினருடன் தொடர்ந்து இணக்கமாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் ஆலோசனைகள் நடத்தி, நம் பயணத்தில் இணைந்திட விரும்பிய கட்சிகளுக்கும் இடமளித்து, உறுதியான வெற்றிக்கான கூட்டணியை உங்களில் ஒருவனான நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன் என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள் என ஸ்டாலின் சொன்னது தவெகவை என்கிறார்கள் பலர். ஏனெனில், காங்கிரஸுக்கு 70க்கும் மேற்பட்ட தொகுதிகளை கொடுக்க தவெக முன்வந்தது குறிப்பிடத்தக்கது.