பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் கடத்தல் புகார்: மக்களவையில் அமளி, தள்ளிவைப்பு!

செவ்வாய், 22 ஜூலை 2008 (14:45 IST)
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்கும் முடிவை எடுத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட புகாரையடுத்து மக்களவையில் அமளி ஏற்பட்டது.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மீது நடந்துவரும் விவாதத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் உறுப்பினர் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தபோது, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பிரஜேஷ் பதக் குறுக்கிட்டு அவைத்தலைவரை நோக்கி தங்களது கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதுபற்றி தான் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும் கூறினார். பிரஜேஷ் பதக் பேசிக்கொண்டிருந்தபோது அக்கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் எழுந்து முழக்கமிடத் துவங்கினர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

உறுப்பினரின் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சரை தான் கேட்டுக்கொண்டிருப்பதாகவும், எனவே அமைதி காக்கும்படியும் சோம்நாத் சாட்டர்ஜி கேட்டுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் குப்தாவும் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆயினும், பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்ததால், அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை தள்ளிவைப்பதாக சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்