1998 அணு ஆயுத சோதனையை எதிர்க்கவில்லை: பிரதமர்!
திங்கள், 21 ஜூலை 2008 (15:18 IST)
கடந்த 1998 இல் பொக்ரானில் நடத்தப்பட்ட அணு ஆயுதச் சோதனையைத் தான் எதிர்க்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
மக்களவையில் இன்று பிரதமர் கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேசிய எல்.கே.அத்வானி, 1998 பொக்ரான் II அணு ஆயுதச் சோதனையை பிரதமர் எதிர்த்ததாகக் குற்றம்சாற்றினார்.
இதற்கு உடனடியாகப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், அணு ஆயுதச் சோதனைகளைத் தான் எதிர்க்கவில்லை என்றும், நமது நாட்டின் மீது விதிக்கப்பட உள்ள தடைகளைப் பற்றியும், அவற்றைக் சுமக்க நாடு தயாராக உள்ளதா என்பது பற்றியும் மட்டுமே தான் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்தார்.
அத்வானி பேசுகையில், மாநிலங்களவையில் மன்மோகன் சிங்கிற்கும் மறைந்த பா.ஜ.க. உறுப்பினர் கே.ஆர்.மல்கானிக்கும் இடையில் நடந்த காரசார விவாதங்களை சுட்டிக்காட்டினார்.
இதற்கு உடனடியாகப் பதிலளித்த பிரதமர், "அணு ஆயுதப் பரவல் தடையை இந்தியா ஆதரிக்கும் நிலையில், பா.ஜ.க. அரசு அணு ஆயுதச் சோதனையை நடத்துவது பற்றியும், அதற்குப் பிறகு இந்தியா மீது விதிக்கப்பட்ட தடைகளைப் பற்றியுமே நான் விமர்சித்தேன்." என்றார்.