ஜூலை 18 இல் ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்களிடம் இந்தியா விளக்கம்!
செவ்வாய், 15 ஜூலை 2008 (15:31 IST)
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திப்பதற்கு முன்னதாகவே, வருகிற 18 ஆம் தேதி வியன்னாவில் பன்னாட்டு அணு சக்தி முகமையின் (ஐ.ஏ.இ.ஏ.) ஆளுநர்களிடம் இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு விளக்கவிருக்கிறது.
இதையடுத்து கண்காணிப்பு ஒப்பந்த வரைவின் மீது ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்கள் குழு ஆகஸ்ட் 1 ஆம் தேதி விவாதித்து முடிவெடுக்கவிருக்கிறது. முன்பு இந்த விவாதம் ஜூலை 28 ஆம் தேதி நடக்கும் என்று தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் விளக்கத்தை வருகிற 18 ஆம் தேதி கேட்பதற்குச் சம்மதித்துள்ள தகவலை, 35 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்கள் குழு இந்தியாவிற்கு திங்கட்கிழமை தெரிவித்துள்ளது என்று ஐ.ஏ.இ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 7 ஆம் தேதி சுற்றுக்கு விடப்பட்ட, ஐ.ஏ.இ.ஏ. மற்றும் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ள கண்காணிப்பு ஒப்பந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றி விளக்குவதற்கான அழைப்பை ஐ.ஏ.இ.ஏ.விற்கு ஆஸ்ட்ரியாவிற்கான இந்தியத் தூதர் செளராப் குமார் அனுப்பியுள்ளார்.
இந்தியாவின் விளக்கத்தை அளிப்பதற்காக மத்திய அயலுறவு உயர் அதிகாரி ஒருவர் புதன்கிழமை வியன்னா புறப்படுகிறார். முன்னதாக அவர் தனது பயணம் குறித்து சக அதிகாரிகளிடம் விளக்கியுள்ளார்.
இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தம் பற்றி விவாதித்து முடிவெடுப்பதற்கான ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்கள் கூட்டம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடக்கக் கூடும் என்று ஐ.ஏ.இ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அன்றைய நாளே கண்காணிப்பு ஒப்பந்த வரைவு ஐ.ஏ.இ.ஏ. உறுப்பினர்களான மற்ற 144 நாடுகளுக்கும் வினியோகிக்கப்படும்.
முன்னதாக கண்காணிப்பு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரகசியமாக வைத்திருப்பதாக இடதுசாரிகள் குற்றம்சாற்றியதை அடுத்து, மத்திய அயலுறவு அமைச்சகம் அந்த ஒப்பந்தத்தின் நகலை தனது இணைய தளத்தில் வெளியிட்டது.