நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னரே உலக வர்த்தக அமைப்பில் பங்கேற்பு!
திங்கள், 14 ஜூலை 2008 (12:38 IST)
ஜெனிவாவில் நடைபெற உள்ள உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் ஜூலை 21 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாய விளை பொருட்கள், சேவை துறை ஆகியவற்றில் உடன்பாடு செய்து கொள்ள முக்கியமான பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
விவசாய விளை பொருட்கள் தொடர்பான பேச்சு வார்த்தையில் இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளுக்கும், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கு முன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
உலக வர்த்தக அமைப்பில் இந்த வருட இறுதிக்குள் விவசாய விளைபொருட்கள் வரத்தகம் தொடர்பான உடன்பாடு ஏற்பட வேண்டும்.
இதனால் ஜெனிவாவில் ஜூலை 21 முதல் 24ஆம் தேதி வரை நடக்கும் கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதில் பங்கேற்க மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் ஜூலை 19ஆம் தேதி புறப்படுவதாக இருந்தது. அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ளது. இதற்கான நாடாளுமன்ற கூட்டம் 21, 22ஆம் தேதிகளில் கூட்டப்பட்டுள்ளது.
இதனால் கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின்னரே உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஜெனிவாவிற்கு புறப்பட்டு செல்வார்.
மத்திய பிரதேசம் சிந்த்வாரா நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக கமல்நாத் உள்ளார்.
மற்ற இரு அமைச்சர்களான வர்த்தக துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தொழில் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளன்ர். இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலநது கொள்ள அவசியம் இல்லை. ஆனால் இருவருக்கும் உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை பற்றிய விபரம் முழு அளவு தெரியாது.
இதனால் கமல்நாத், நேரடியாக கலந்து கொள்ள இயலாததால், அவரின் சார்பாக பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள வர்த்தக துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையை நியமித்துள்ளார்.
இந்தியா ஜி-20 மற்றும் ஜி-33 என்ற வளரும் நாடுகளின் அமைப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது. இவை வளர்ந்த நாடுகள், தங்கள் விவசாயிகளுக்கு பல்வேறு மானியம் வழங்குவதை குறைக்க வேண்டும். ஏழை நாடுகளின் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் உடன்பாடு ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.