இடதுசாரிகள் நாளை முதல் நாடு தழுவிய போராட்டம்!
ஞாயிறு, 13 ஜூலை 2008 (15:30 IST)
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் தோல்வியைக் கண்டித்தும், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் உள்ள அபாயங்களை விளக்கியும் இடதுசாரிகள் அறிவித்துள்ள நாடு தழுவிய போராட்ட பிரச்சார இயக்கம் நாளை தொடங்குகிறது.
இந்த இயக்கத்தின் போது, தாங்கள் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கான காரணங்களை மக்களுக்கு விளக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, பார்வார்ட் பிளாக் உள்ளிட்ட நான்கு இடதுசாரிக் கட்சிகளும் கூறியுள்ளன.
புது டெல்லியில் உள்ள மவ்லன்கார் மைதானத்தில் நாளை நடக்கவுள்ள துவக்க நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் இடதசாரித் தலைவர்கள், ஐ.மு.கூ. அரசு குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது, தேச நலன்களை அடகு வைத்துள்ளது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைக்கும் விடயத்தில் தோல்வியடைந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாற்றுக்களை விளக்கிப் பேசவுள்ளனர்.
"மத்திய அரசிற்கு நாங்கள் அளித்து வந்த ஆதரவை நாங்கள் விலக்கிக் கொண்டதற்கான காரணங்களை மக்களிடம் விளக்கப் போகிறோம். விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்குக் காரணமான ஐ.மு.கூ. அரசின் அமெரிக்க ஆதரவு மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளை விளக்கப் போகிறோம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.