ஐ.ஏ.இ.ஏ. ஒப்பந்த வரைவு தேச நலனிற்கு கேடானது: அணு சக்தி விஞ்ஞானிகள்!

வியாழன், 10 ஜூலை 2008 (19:55 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர பன்னாட்டு அணு சக்தி முகமையின் (IAEA) ஒப்புதலுக்கு இந்தியா தயாரித்து அனுப்பியுள்ள கண்காணிப்பு ஒப்பந்த வரைவு நமது தேச நலனிற்கு குந்தகம் விளைவிக்கக்கூடியது என்று அணு சக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

“இந்த ஒப்பந்த வரைவு அணு ஆயுதம் பெற்றிராத நாடுகளுடன் பன்னாட்டு அணு சக்தி முகமை செய்துகொள்ளும் கண்காணிப்பு ஒப்பந்தம் போன்றதே தவிர எந்த விதத்திலும் இந்தியாவிற்கென்று சிறப்பாக வரைவு செய்யப்பட்டதில்லை” என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. ஐயங்கரும், அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணனும் கூறியுள்ளனர்.

இதே கருத்தை பாபா அணு சக்தி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவரும் விஞ்ஞானியுமான ஏ.என். பிரசாத்தும் கூறியுள்ளார்.

அணு சக்தி ஒத்துழைப்பின் கீழ் நமது அணு உலைகளுக்கு யுரேனியம் எரிபொருள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டால், அதற்கு மாற்று நடவடிக்கைகள் (corrective measures) எடுக்கும் உரிமையைப் பெறுவோம் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அளித்த உறுதியின்படி அது ஒப்பந்த வரைவில் இடம்பெற்றுள்ளதைத் தவிர, இந்தியாவிற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தமாக இது இல்லையென்றும், அணு ஆயுதத்தைப் பெற்றிராத நாடுகளுடன் (சுற்றறிக்கை 66ன் கீழ்) செய்துகொள்ளும் ஒப்பந்தம் போன்றே இதுவும் என்று விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்த வரைவு நமது அணு ஆயுத ஆராய்ச்சியில் தலையிடவில்லை என்பதைத் தவிர எந்தவிதத்திலும் நமக்கு சிறப்பு நிலையை அளிக்கவில்லையென்றும், அணு சக்தி ஒத்துழைப்பின் முக்கிய அம்சமான தொடர்ந்து எரிபொருள் வழங்கல் உறுதிமொழி அளிக்கப்படவில்லை என்றும் விஞ்ஞானி பி.கே. ஐயங்கர் கூறியுள்ளார்.

“அமெரிக்க இணையத் தளம் ஒன்று இந்த ஒப்பந்த வரைவை வெளியிட்ட பிறகே நமது அரசு அதனை வெளிப்படுத்தியுள்ளது சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆன பிறகும் தொடரும் காலனிய அடிமைப் புத்தியையே காட்டுகிறது” என்று ஐயங்கர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

“மத்திய அரசால் நேற்று ரகசியமான ஆவணம் என்று வர்ணிக்கப்பட்டது இன்று பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது சுவராஸ்யமாகவுள்ளது” என்றும் ஐயங்கர் கூறியுள்ளார்.

அணு சக்தி முகமையின் தீவிரமான கண்காணிப்பிற்கு வழவகுக்கும் அதன் விதிமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூடுதல் ஒப்பந்தம் குறித்தும் விவாதித்திருக்கலாம் என்று விஞ்ஞானி பிரசாத் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்