மத்திய அரசிற்கு எதிராக இடதுசாரிகளுடன் இணையும் மாயாவதி!
வியாழன், 10 ஜூலை 2008 (19:38 IST)
அணு சக்தி ஒப்பந்த விவகாரம், பணவீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசிற்கு எதிராக ஒன்றுபட்டுப் போராட உ.பி. முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய இரு தரப்பினரும் அணு சக்தி ஒப்பந்தம் தேச நலனிற்கு எதிரானது என்று கூறி வருகின்றனர். இவ்விடயத்தில் மத்திய அரசிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை இணைந்து நடத்துவது குறித்து இரண்டு தரப்பினருக்கும் இடையில் முதல்கட்டப் பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் தன்னுடைய பழைய நண்பனா சமாஜ்வாடி கட்சியுடன் உள்ள எல்லா உறவுகளையும் முறித்துக்கொண்டுள்ள இடதுசாரிகள், ஆளும் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைவதற்கான தயாரிப்புகளை வேகப்படுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 16-17 தேதிகளில் லக்னோவில் நடக்கவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உ.பி. மாநிலக் குழு கூட்டத்திலும், ஜூலை 19-20 தேதிகளில் டெல்லியில் நடக்கவுள்ள மத்தியக் குழுக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட உள்ளதாகக் கருதப்படுகிறது.
முன்னதாக ஜூலை 1 ஆம் தேதி, அணு சக்தி ஒப்பந்தத்தைத் தனது கட்சி எதிர்ப்பதாக அறிவித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, அந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று விமர்ச்சித்தார்.
அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக ஜூலை 14 ஆம் தேதி துவங்கவுள்ள நாடு தழுவிய போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், அந்த ஒப்பந்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டை உடைய எல்லாக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டுமாறு மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளதாக அக்கட்சியின் உ.பி. தலைவர்கள் தெரிவித்தனர்.
இடதுசாரிகளுடன் இணைவது பற்றி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்களிடம் கேட்டதற்கு, இதுபற்றி மாயாவதிதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றனர்.