இடதுசாரிகள், பா.ஜ.க. மீது காங்கிரஸ் பாய்ச்சல்!
வியாழன், 10 ஜூலை 2008 (13:21 IST)
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் 'ஈரை பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும்" வகையில் இடதுசாரிகளும், பா.ஜ.க.வும் மீண்டும் தேசத்தைத் தவறாக வழிநடத்துகின்றனர் என்று காங்கிரஸ் குற்றம்சாற்றியுள்ளது.
"இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தேவையான இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக பன்னாட்டு அணு சக்தி முகமையை அணுகுவதற்கு முன்பு, நாடாளுமன்றத்தில் ஒப்புதலைப் பெறுவோம் என்பது இடதுசாரிகளுக்கும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் நன்றாகத் தெரியும்.
தற்போது தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தின் வரைவு அறிக்கை உறுப்பினர்களின் சுற்றுக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேண்டுமென்றே இடதுசாரிகளும், பா.ஜ.க. வும் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர்" என்று காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் மனு சிங்வி கூறினார்.
இடதுசாரிகள், பா.ஜ.க.வின் பிரச்சாரம் மக்களவையில் மத்திய அரசு சந்திக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பைப் பாதிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளிக்காத சிங்வி, "எதிர்ப்பவர்கள் எல்லாம் ஈரை பேனாக்கி பேனைப் பெருமாளாக்குகின்றனர்" என்றார்.
முன்னதாக நேற்று, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பிறகே பன்னாட்டு அணு சக்தி முகமையிடம் செல்வோம் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதியளித்துள்ள நிலையில், தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தின் வரைவு எப்படி சுற்றுக்கு விடப்படுகிறது என்று பா.ஜ.க. ஆச்சர்யம் தெரிவித்திருந்தது.
இதேபோல இடதுசாரிகளும் தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதிசெய்ய மத்திய அரசு மாற்று வழிகளை நாடுவதாகக் குற்றம்சாற்றியிருந்தனர்.