பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்யப்படும் கண்காணிப்பு ஒப்பந்தம் ரகசிய ஆவணம் அல்ல என்று மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஸ் திவாரி, "பன்னாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல் உச்சத்தில் இருக்கும் நிலையில், ரகசியமான அணுத் தகவல்கள் அடங்கிய இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்த விவரங்களை பொதுவில் வெளியிட முடியாது" என்றார்.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வர பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்யப்படும் கண்காணிப்பு ஒப்பந்தத்தின் 15 ஆவது பிரிவு, அந்த ஒப்பந்தத்தை ரகசியமாக வைக்கும்படி செய்கிறது. ஒப்பந்த விவரங்களை பொதுவில் வெளியிடுவதையும் அப்பிரிவு தடுக்கிறது.
மேலும், "பயங்கரவாத சக்திகள் அணு தொழில்நுட்பங்களுடன் கூடிய அணு பயங்கரவாத சக்திகளாக மாறும் வாய்ப்புக்கள் நமது நாட்டை அச்சுறுத்திவரும் நிலையை இடதுசாரிகள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்" என்று கேட்ட திவாரி, எல்லாத் தகவல்களையும் அவர்களுடன் அரசால் ஏன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்பதை இடதுசாரிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்யப்படும் கண்காணிப்பு ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள் தொடர்பான கேள்விகளை மட்டுமே இடதுசாரிகள் எழுப்பியுள்ள நிலையில், அவர்கள் கேட்காத அணுத் தகவல்களை வெளியிட முடியாது என்று காங்கிரஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.