கண்காணிப்பு ஒப்பந்தம் ரகசிய ஆவணம் அல்ல – பிரகாஷ் காரத்!
புதன், 9 ஜூலை 2008 (17:42 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக்கொண்டு வர பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்யப்படும் கண்காணிப்பு ஒப்பந்தம் ரகசிய ஆவணம் அல்ல என்று மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
மத்திய அரசிற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கான காரணத்தை விளக்கி இடதுசாரிகள் அனுப்பிய கடிதத்திற்குப் பதிலளித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பன்னாட்டு முகமையுடன் செய்துகொள்ளப்போதும் கண்காணிப்பு ஒப்பந்த வரைவு பாதுகாக்கப்பட்ட (ரகசிய) ஆவணம் என்றும், அதனை பொதுவில் வெளியிட முடியாது என்றும் கூறியிருந்தார்.
இதற்கு இன்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பதிலளித்த பிரகாஷ் காரத், அது பொதுவில் வெளியிடப்படக்கூடாத ஆவணம் என்று பன்னாட்டு அணு சக்தி முகமையின் எந்த விதிமுறை கூறுகிறது என்பதை அரசு காட்டட்டும் என்று கூறினார்.
கண்காணிப்பு ஒப்பந்தம் ஒரு ரகசிய ஆவணம் என்பது உண்மையானால், பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் அமெரிக்கா செய்துகொண்ட கூடுதல் ஒப்பந்தம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எப்படி?” என்று கேட்டுள்ள பிரகாஷ் காரத், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான இந்த ஒப்பந்தத்திற்கு மட்டும் அப்படியொரு சிறப்பு விதிமுறை உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டுமானால், அந்த ஒப்பந்தத்தின் உள் விவரங்களை அரசு வெளியிட்டுத்தான் ஆக வேண்டும் என்று கூறினார்.
“எங்களுடைய கேள்விகளுக்கு அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை, ஆனால் நாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளும், எங்களுடைய நிலைப்பாடு என்னவென்பதையும் நாளை வெளியிடுவோம்” என்று பிரகாஷ் காரத் கூறினார்.