பா.ஜ.க., வி.எச்.பி. போராட்டத்தில் கலவரம்: 2 பேர் பலி!
வியாழன், 3 ஜூலை 2008 (20:49 IST)
அமர்நாத் கோவில் வாரியத்திற்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் வி.எச்.பி. அமைப்புகள் நடத்திய நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் இந்தூரில் கலவரமாக மாறியதில் 2 பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்தனர்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவத்து தடைபட்டதுடன், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஜம்முவில் பல்வேறு பகுதிகளில் முழு அடைப்புப் போராட்டத்திற்குப் பெருமளவில் ஆதரவு கிடைக்கவில்லை. சில இடங்களில் வாகனங்களும், கடைகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. காவலர்களுக்கும் வி.எச்.பி. தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
ஜம்முவில் மூன்றாவது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவை மீறி நடந்து வந்த வன்முறைகள், இந்த முழு அடைப்புப் போராட்டத்தினால் அதிகரித்தது. பல இடங்களில் முஸ்லிம் குழுக்களுக்கும் பா.ஜ.க. தொண்டர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது.
ஜார்கண்ட், அஸ்ஸாம், கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் சில இடங்களில் காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது கல்வீச்சில் பலர் காயமடைந்தனர்.
டெல்லி, திரிபுரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் முழு அடைப்புப் போராட்டத்திற்குப் பெரிய அளவிலான ஆதரவு எதுவும் இல்லை.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இரு பிரிவினருக்கு இடையில் கலவரம் மூண்டது. இதில் சிலர் கஜ்ரானா என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தைத் தாக்கினர்.
இந்தக் கலவரத்தில் இருவர் பலியானதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக இந்தூர் ஆட்சியர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.